அட்டகாசமான திரில்லர் காமெடி திரைப்படமாக வெளியாகி ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற திரைப்படம் ‘மரகத நாணயம்’. இப்படத்தையடுத்து இயக்குனர் ARK சரவணன் அவர்கள் நீண்ட ஆண்டு கழித்து இயக்கிய திரைப்படம் ‘வீரன்’. முதல் முறையாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவான வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க இவருடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் டிமேனன் ஒளிப்பதிவு செய்ய ஜிகே பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் பாடல்கள் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது.

அதன்படி கடந்த மே 2ம் தேதி வீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நான்காவது நாளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வீரன் திரைப்படம் வசூல் அடிப்படையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் வீரன் திரைப்படம் குழந்தைகளுக்காக சிறப்பு திரையிடல் படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் படம் பார்த்து உற்சாகத்தில் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். படம் முடிந்து படக்குழுவினர் குழந்தைகளிடம் படம் எப்படி இருந்தது என்ற தகவலை கேட்டு தெரிந்து கொண்டனர். இதனிடையே ஹிப்ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கெட்டப்பில் சர்ப்ரைஸாக நிகழ்வில் கலந்து கொண்டு குழந்தைகளை மகிழ்வித்தார். குழந்தைகளுடன் உரையாடி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டார். மேலும் தொடர்ந்து மேடையில் குழந்தைகளுடன் சேர்ந்து மீசைய முறுக்கு படத்தில் இடம் பெற்ற வாடிபுள்ள வாடி பாடலை பாடி கொண்டாடினார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வீரன் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பின் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில், “குழந்தைகளிடம் நாட்டார் தெய்வ வழிபாடு சென்றடைய வேண்டும் என்பது வீரன் படத்தின் நோக்கம். சூப்பர் ஹீரோ என்ற இனிப்பை குழந்தைகளுக்கு கொடுத்து இந்த கருத்தை கொடுத்துள்ளோம்..” என்றார் இயக்குனர் ARK சரவணன்.

பின் தொடர்ந்து கதையின் நாயகன் ஹிப் ஹாப் ஆதி, “பக்தியை தாண்டி அறிவை கடத்துவதே வீரன் படம். சூப்பர் ஹீரோ கதையில் சொன்னதால் எளிதாக சென்றடையும். இது மக்களுக்கு போய் சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள் முன் இது போன்ற கதாபாத்திரம் போல் நின்றது அவர்கள் ஆர்வத்தில் இருந்தார்கள் மகிழ்ந்தனர். இந்த படத்தை ஒரு பொழுதுப்போக்கு திரைப்படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் படம் பொழுது போக்கை தாண்டி நல்ல வரவேற்பையும் கிடைத்து வருகிறது.” என்றார்.