மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் மிமிக்ரி கலைஞராகவும் வளம் வந்த கொல்லம் சுதி கார் விபத்தில் காலமானார். பிரபலமான மலையாள தொலைக்காட்சிகளில் மிமிக்ரி கலைஞராக பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மக்களை மகிழ்வித்த கொல்லம் சுதி தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார். தொடர்ந்து மலையாள சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “காந்தாரி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கொல்லம் சுதி தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான “கட்டப்பனையிலே ரித்திக் ரோஷன்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து குஞ்சாகா போபன் கதாநாயகனாக நடித்த “குட்டண்டன் மாரப்பா” , “ஸ்வர்க்கத்திலே கட்டுறும்பு” மற்றும் த்ரில்லர் படமான “எஸ்கேப் ஃப்ரம் உக்காண்டா” "கொல்லம்" உள்ளிட்ட படங்களிலும் நடித்த கொல்லம் சுதி நடிகர் திலீப் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த “கேஷு ஈ வீட்டின்டே நாதன்” படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போக தொலைக்காட்சிகளிலும் தொடர்ச்சியாக நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் கொல்லம் சுதி தற்போது காலமானார். அவருக்கு வயது 39. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு வட்டக்கரா பகுதியில் இருந்து வீடு திரும்பிய கொல்லம் சுதியின் கார் திருச்சூர் பகுதியில் உள்ள கைப்பமங்கலம் பகுதியில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட மற்ற மூன்று மிமிக்ரி கலைஞர்களான பினு அடிமாலி, உல்லாஸ் மற்றும் மகேஷ் ஆகியோரோடு வீடு திரும்பி கொண்டு இருந்த கொல்லம் சுதி சென்ற கார் எதிர்பாராத விதமாக அதிகாலை 4:30 மணி அளவில் விபத்தில் சிக்கியது. எதிரே சரக்குகளை ஏற்றி வந்த கனரக வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கொல்லம் சுதி மற்றும் உடன் பயணித்த மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நடிகர் கொல்லம் சுதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக தீவிர சிகிச்சை அளிப்பதற்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தலையில் மிக மோசமான காயம் ஏற்பட்டிருந்த காரணத்தினால் கொல்லம் சுதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இன்று ஜூன் ஐந்தாம் தேதி அதிகாலை திருச்சூரில், உள்ள கைப்பமங்களம் பகுதியில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த நடிகர் கொல்லம் சுதியுடன் பயணித்த மற்ற மூன்று மிமிக்ரி கலைஞர்களும் கொடுங்கலூர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மிமிக்ரி கலைஞராக சின்னத்திரையின் வழியே மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது நடிகராக மலையாள சினிமாவில் வளர்ந்து வந்த நடிகர் கொல்லம் சுதி தனது 39 வது வயதிலேயே திடீரென உயிர் இழந்தது மலையாள திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் கொல்லம் சுதியின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மலையாள சினிமாவை சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.