தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் முக்கியமானவராகவும் ரசிகர்களின் மனதை காலம் காலமாக கவர்ந்து வரும் தம்பதியினராகவும் இருப்பவர் சூர்யா ஜோதிகா தம்பதியினர். 90 கால சினிமாவில் இருவரும் அறிமுகமாகி பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சூர்யா ஜோதிகா கடந்த 2006 ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்த காதல் திரை ஜோடியாக இருப்பவர் சூர்யா ஜோதிகா. தற்போது இருவரும் பல முக்கிய படங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என்ற பெயரில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தன் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் இணைந்து 2D தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல முக்கிய படங்களை தயாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகை ஜோதிகாவும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜோதிகா மலையாளத்தில் ‘காதல் டூ கோர்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதே நேரத்தில் இந்தியில் ராஜ்குமார் ராவ் படமான ‘ஸ்ரீ’ படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் இந்த தம்பதியினர் பல சமூக நல பணிகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது, ரசிகர்களின் அதிகப்படியான ஆதரவினை பெற்ற இந்த தம்பதியினர் தற்போது சிவங்கன்கையில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியத்திற்கு நேரில் சென்றுள்னர்.

தமிழ் பெருமையையும் நாகரீகத்தையும் உலகிற்கு உரக்க சொல்ல சான்றாக எடுத்து சொல்லும் வகையில் கிடைக்கப்பெற்றது தான் சிவகங்கை மாவட்டம் கீழடி. இங்கு பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய உலகத்தரம் வாயந்த அருங்காட்சியமாக அமைந்துள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு இதுவரை இலவசமாக பார்வைக்கு விடப்பட்டிருந்த அருங்காட்சியம் இன்று முதல் (ஏப்ரல் 1) பெரியவர்களுக்கு ரூ15, சிறியவர்களுக்கு ரூ 10 மாணவர்களுக்கு ரூ 5 என கட்டணம் விதிக்கப் படுவதாக தொல்லியல் துறை முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதியினர் குழந்தைகள் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியத்திற்கு கட்டணம் செலுத்தி பார்வையிட்டனர். இவர்களுடன் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்களும் கலந்து கொண்டனர். குடும்பத்துடன் அரசு கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட சூர்யா ஜோதிகா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது