கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து ரசிகர்கள் கவலையோடு பகிர்ந்த செய்திகளுக்கு பதிலாக இனிப்பான செய்தியை நடிகர் சூர்யா தற்போது பகிர்ந்து கொண்டார். இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா காயமடைந்தார் என தகவல்கள் வெளிவந்தன. சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இன்று நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முக்கிய காட்சி ஒன்றின் படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் சூர்யாவிற்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து உடனடியாக கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் வருத்தத்திற்கு உள்ளான நிலையில், விரைவாக நடிகர் சூர்யாவின் காயத்திற்கு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் தற்போது காயத்தில் இருந்து சூர்யா மீண்டு வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த நிலையில் இந்த விபத்து குறித்தும் தற்போதைய தனது உடல்நிலை குறித்தும் நடிகர் சூர்யா பதிலளித்திருக்கிறார். இது குறித்து தனது X பக்கத்தில், "அன்பான நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது #அன்பான ஃபேன்ஸ் 'விரைவில் குணமடையுங்கள்' என்ற உங்களது செய்திகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.. இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன்.. உங்கள் அனைவரின் அன்புக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்" என பதிவிட்டு இருக்கிறார். தனது தற்போதைய உடல்நிலை குறித்த நடிகர் சூர்யாவின் இந்த பதிவால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். நடிகர் சூர்யாவின் அந்தப் பதிவு இதோ...

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த படங்களை இயக்கிய இயக்குனர் சிவா முதல்முறையாக நடிகர் சூர்யாவுடன் கங்குவா. படத்தில் இணைந்திருக்கிறார். பிரபல இளம் பாலிவுட் நடிகை திஷா பதானி கதையின் நாயகியாக நடிக்கும் இந்த கங்குவா திரைப்படத்தில் நட்டி என்கிற நடராஜன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா திரைப் படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவரும் என தெரிகிறது.