தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. பிரபல ராப் பாடகரான இவர் ஆரம்ப காலத்தில் அதவாது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் ஒருசேர மக்களிடம் தன் சுயாதீன பாடல்களை கொண்டு செர்த்தவர். இளைஞர்களை கவரும் பாடல் ஒருபுறம் சமூக அக்கறை பாடல்கள் ஒருபுறம் என்று தனித்துவமான தமிழ் வரிகளை துள்ளலான இசையுடன் கோர்த்து கொடுத்து பிரபலமடைந்தார். அதன் பின் அனிரூத், விஜய் ஆன்டணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பின்னணி பாடகராக திரையுலகில் வலம் வந்த ஹிப் ஹாப் ஆதி பின் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலே அட்டகாசமான இசையை கொடுத்து தமிழ் சினிமாவின் கவனம் பெற்றார். பின் இன்று நேற்று நாளை, இமைக்கா நொடிகள், கதகளி, தனி ஒருவன் மற்றும் கோமாளி என பல ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். மேலும் பல பாடல்களுக்கு வரிகளும் எழுதி கவனிக்கத்தக்க பாடலாசிரியராகவும் வலம் வந்தார்.

மேலும் மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். பின் இயக்குனராகவும் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பன்முக திறன் கொண்டு அட்டகாசமாக வலம் வருகிறார் ஆதி. தற்போது இவர் நடிப்பில் சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வீரன்’. தமிழில் மெகா ஹிட் அடித்த மரகத நாணயம் படத்தின் இயக்குனரின் அடுத்த படைப்பு என்பது குறிப்பிடதக்கது.

மின்னல் முரளி கெட்டப்பில் முதல் பார்வை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. நிச்சயம் படம் ஒரு பேண்டசி திரில்லர் திரைப்படமாக வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு, வீரன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘தண்டர் காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள முதல் பாடல் வரும் மார்ச் 31 ம் தேதி வெளியாகவுள்ளதாக அட்டகாசமான போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு. இதையடுத்து அந்த போஸ்டரை படக்குழு வைரலாக்கி வருகின்றனர்.

ஹிப் ஹாப் ஆதி முன்னதாக நடித்த படங்கள் பெருமளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் படங்கள் அப்போது டிரென்ட்டிங்கில் இருந்தது. இன்றைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ள ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயம் வீரன் திரைப்படம் மேலும் ஒரு தனி அங்கீகாரம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.