இன்று உலகமெங்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தின் ஆரவாரத்துடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘விடுதலை முதல் பாகம்’. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றி மாறன் அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் துணைவன் கதையை தழுவி அட்டகாசமான பீரியட் கிரைம் திரில்லர் திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுத்திருக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியானது. நடிகர் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பினை ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வரும் நிலையில் பிரபல திரைப்படமான பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை படத்தை பாராட்டி பகிர்ந்துள்ள பதிவு தற்போது ரசிகர்கள்பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர்.

“இது வெறும் மாற்றம் மட்டும் இல்லை. இது சூரியின் மதிப்பை உணர்த்தும் படமாக இருக்கும். நன்றி வெற்றிமாறன் சார் அவரை நம்பி அவருக்கு சிறந்த பாதையை வகுத்து கொடுத்ததற்கு.. சேது ணா.. நீங்க இல்லாம தமிழ் சினிமா ஓரடி முன்னாடி போகாத மாதிரி உங்கள உருவாக்குனதுக்கு ஒரு சல்யூட்..

பொல்லாதவன் படம் வெளியான நாளிலிருந்தே உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உள்ளது வெற்றி சார். மாஸ்ட்ரோ ராஜா சார் பற்றி பேச ஒரு கதை பத்தாது.. ஆயிரம் கதை பத்தாது. என்றும் உங்கள் ரசிகன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மலையாளம் மற்றும் தமிழ் துறையில் தொடர்ந்து படங்களை கொடுத்து இரண்டு துறைகளிலும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இவரது பிரேமம் திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. தற்போது அவர் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புது தமிழ் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்று முன்னதாக அறிவித்திருந்தார். முன்னதாக தமிழில் நேரம் மற்றும் அவியல் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.