கொரோனா வைரசை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வரும் நிலையில், புதிதாக கொரோனா வைரஸை கொல்லும் சூயிங்கத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுமுடக்கத்தை அறிவித்தன.

இந்த கொரோனா வைரஸால் உயிர் பலி அதிகரித்து முதல் அலை முடிந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்தது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் முதல் அலையை விட, இரண்டாவது அலை வீரியமிக்கதாக மாறியது.

இதனால் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் உயிரிழப்பு பன்மடங்கு உயர்ந்தது. அதிலும் குறிப்பாக இரண்டாவது அலையில் இளைஞர்கள் பெருமளவில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இதையடுத்து உலக நாடுகள் பலவும் கண்டுப்பிடித்த கொரோனா தடுப்பூசியை முன்கள பணியாளர்கள் எனப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறையினர் ஆகியோருக்கு செலுத்த ஆரம்பித்தனர்.
பிறகு வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி மட்டுமின்றி கொரோனா வைரஸை அழிக்க மாத்திரைகளை உற்பத்தி செய்யும் பரிசோதனை முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது டெல்டாவை அடுத்து கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த ஒமிக்ரான் திரிபு வைரஸ் உயிரிழப்புகளை இதுவரை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதிவேகத்தில் பரவும் என்பதால் உலக நாடுகள் விமான போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரசை கொல்லும் சூயிங்கம்மை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக, இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஹென்றி டேனியல் கூறுகையில், ‘கொரோனா வைரஸ், மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பெருகுகிறது.

எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர் வாயிலிருந்து வெளியேறி மற்றவர்களை அடையக்கூடும். உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரசை எங்கள் சூயிங்கம் கொல்லும். இதன்மூலம் கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படுவதுடன், அதன் பரவலும் தடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இதற்காக தாவரத்தில் இருந்து பெறப்படும் ‘ஏசிஇ2’ என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கொரோனா நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரியில் இதை பரிசோதித்தபோது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.

அடுத்தகட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புரதம் அடங்கிய சூயிங்கம்மை கொடுப்பது பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் இருக்குமா என்று அறிவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள். அதற்காக அனுமதி பெறும் முனைப்பில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் அந்த வைரஸ் தொற்றலாம். அவர்கள் மூலம் பிறருக்கு பரவலாம் என்ற நிலையில், வைரஸ் பரவலுக்கு தடை போடுவது முக்கியம்.

அதற்கு இந்த சூயிங்கம் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள். ஆரம்பகட்ட ஆய்வுகளை எல்லாம் தாண்டி இந்த ‘சூப்பர் சூயிங்கம்’ மட்டும் விற்பனைக்கு வந்துவிட்டால், சூயிங்கம் மென்றே கொரோனோ வைரசை கொன்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.