புதிய கால நிலைமாற்றத்தால், உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள், வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகமே, கொரோனா என்னும் கொடிய வைரசால், வழிபிதிங்கி நிர்க்கதியாய் நிற்கிறது. கொரொனாவல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பொருளாதாரம் சீரழிந்து, ஏழை எளிய மக்களை வறுமை என்னும் கொடிய நோய் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், உலகின் புதிய கால நிலை தோன்றி வருவதாகவும் ஆய்வுகள் சமீபத்தில் தெரிவித்தன. அதன்படி, காலநிலை மாற்றத்தால், இந்தியப் பெருங்கடலில் 'எல் நினோ' போன்ற வடிவத்தைத் தூண்டக்கூடும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.

இது உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக்கும் என்றும், நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

'எல் நினோ' என்பது, வெப்பமண்டல பசிபிக் முழுவதும் தற்போதைய தொடர்ச்சியான காலநிலை நிகழ்வின் பெயராகும். இது, ஒவ்வொரு 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒழுங்கற்ற முறையில் முன்னும் பின்னுமாக மாறுவதாகும்.

அத்துடன் வெப்பநிலை, காற்று மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் இடையூறுகளையும் தூண்டுவதாகும். அதே நேரத்தில், இந்தியப் பெருங்கடலில் தோன்றும், 'எல் நினோ' பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதனை, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி பெட்ரோ டினெசியோ மற்றும் அவரது குழுவினரும், வெப்பமயமாதலால் இந்தியப் பெருங்கடலில் 'எல் நினோ' ஏற்படக்கூடும் என்பதைத் தீர்மானிக்க, காலநிலை உருவகப்படுத்துதல்களைக்கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, இந்த குழுவினர், நூற்றாண்டின் 2 ஆம் பாதியில், காலநிலை மாற்றம் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டும் மாதிரிகளை உருவாக்கி உள்ளது.

இதில், கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய கண்டுபிடிப்புகள் யாவும், இந்தியப் பெருங்கடல் இன்றைய காலநிலையை விட, மிகவும் வலுவான காலநிலை மாற்றங்களை உண்டாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் காட்டி வருகிறது.

குறிப்பாக, வரும் 2100 ஆம் ஆண்டில், இந்த நிகழ்வு வெளிவரக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கண்டுப்படித்துள்ளனர். மேலும், இதே போன்ற வெப்பமயமாதல் போக்குகள் தொடர்ந்தால், அது 2050 ஆம் ஆண்டிலேயே கூட, அந்த பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த நிகழ்வு கிழக்கு ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பருவமழையைச் சீர்குலைக்கும் என்றும், இது விவசாயத்திற்கான வழக்கமான வருடாந்திர மழையை நம்பியிருக்கும் பகுதியில் வசிப்பவர்களுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்றும், ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.