குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு எதிராகப் பற்றி எரியும் புரட்சித் தீயில், உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் காரணமாக, பல்வேறு நிலங்களில் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஒரு வாரக் காலமாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த நில நாட்களாக அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், நேற்று மட்டும் 44 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதில், நேற்று கட்டுக்கடங்காத மக்கள் போராட்டத்தால், பல இடங்களில் பேரணியும், பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. இதில், பல லட்சம் மக்கள் கலந்துகொண்டு, தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

போராட்டத்தின்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, பொதுமக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டன. இதனையடுத்து, போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீசார், போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

அப்போது அங்கு நின்றிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், அங்குக் கலவரம் வெடித்தது. இதனையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடியும், கண்ணீர்புகை குண்டு வீசினர்.

இதில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சில இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை மறுத்துள்ள அந்த மாநில போலீசார், கண்ணீர்புகை குண்டு வீசியதுடன், ரப்பர் குண்டுகளால் மட்டுமே சுட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளன.

போலீசார் தாக்கியதில் பொதுமக்கள் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நல்பந்த் புறநகர் காவல் நிலையத்தில் புகுந்து, அங்கிருந்த நாற்காலி, மேஜைகளுக்கு தீ வைத்து எரித்துவிட்டு, சில போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்துவிட்டுச் சென்றனர். இதனால், உத்தரப்பிரதேச மாநிலமே நேற்று கலவர பூமியாகக் காட்சியளித்தது.

இதனிடையே, பொதுமக்களின் போராட்டம் காரணமாக, வட கிழக்கு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் தொடர் போராட்டத்திற்கு மத்திய அரசு கொஞ்சமும் இறங்கி வராமல், இருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.