மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடப்பட்ட வழக்கில், நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில், சிறந்த ஆசியர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு “நல்லாசிரியர் விருது” வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, மாணவர்களின் வாழ்க்கையைச் செழுமையாக்குதல், பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக, ஆசிரியர் தினத்தன்று, ஆசிரியர் நாகராஜ் என்பவருக்கு, “நல்லாசிரியர் விருது” கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செங்கல்பட்டு அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர், மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, கடந்த 2012 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் இருவரையும் ஆஜர்படுத்தினர்.

அப்போது, இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மீண்டும் இருதரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டது.

இதனையடுத்து, பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், நல்லாசிரியர் விருது பெற்ற நாகராஜுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல், மற்றொரு ஆசிரியர் புகழேந்திக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், தண்டனை விதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.