போலீஸ் எஸ்.ஐ. வில்சன் கொலையில் தேடப்பட்டு வந்த 2 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லையான களியக்காவிளை அருகில் உள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில், கடந்த வாரம் இரவு நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் 55 வயதான வில்சன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 2 மர்ம நபர்கள் அவர் மீது, 3 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சியின் மூலம் துப்பாக்கியால் போலீசாரை சுட்டுக்கொன்றது தவ்பிக், அப்துல் சமீம் ஆகியோர் தான் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் தான் குற்றவாளிகள் என்று கூறி, அவர்களுடைய புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டனர்.

இந்நிலையில், தனிப்படை போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தவ்பிக், அப்துல் சமீம் ஆகிய இருவரையும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து, போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்களைத் தமிழகம் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார், அங்குத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.