மனைவியின் டிக்டாக் வீடியோவால் கடுப்பான கணவன் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவடத்தைச் சேர்ந்த பாச்சூ - பாத்திமா தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாச்சூ, அப்பகுதியில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் பாச்சூ மனைவி பாத்திமா, டிக்டாக் வீடியோவிற்கு அடிமையாகி, அவரே நிறைய வீடியோக்களில் நடித்து, பதிவிட்டு வந்துள்ளார்.

டிக்டாக் வீடியோக்களில் தோன்றும் பாத்திமா, வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டம், வயல்வெளிகளுக்குச் சென்று நடனமாடுவதும், பாட்டுப்பாடுவதும், மற்றவர்களைக் கிண்டல் செய்வதுமாகத் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக அரவது கணவர், பாத்திமாவை கண்டித்துள்ளார். ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத பாத்திமா தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த பாச்சூ, வீட்டிலிருந்த பூரிக்கட்டையால் மனைவியை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரை தூக்கில் தொங்கவிட்டு, மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், எல்லா உண்மைகளும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி, உணவுக்கு மட்டுமில்லை, அது சமூக வலைத்தளங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.