தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் 54 நாட்கள் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலிலிருந்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மத்திய - மாநில அரசுக்கு மிகப் பெரிய பொருளதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன், தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த மார்ச் மாதத்துடன் பணி ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பணி நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஒய்வு பெறும் வயது 58 லிருந்து, 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக” முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், “அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும்” என்றும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

“ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருகிறது” என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.