ஆந்திராவில் தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினம் அடுத்த ஆர்.ஆர்.வேங்கடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் ரசாயன தொழிற்சாலையானது, ஊரடங்கு காரணமாக, ஆலை மூடப்பட்டு இருந்தது.

Visakhapatnam gas leakage on chemical plant

இதனிடையே, ஆலையில் திடீரென்று 'ஸ்டைரீன்' என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனையடுத்து, அது கரும்புகையாக அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரவி உள்ளது.

இதனால், அந்த பகுதி கிராம மக்களுக்கு கண்களில் எரிச்சலுடன், சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அந்த பகுதியில் மயங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான மக்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் முதற்கட்டமாக உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Visakhapatnam gas leakage on chemical plant

இதனையடுத்து, அந்த கரும்புகையானது சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவு வரை பரவியது. இதனால், அந்த பகுதியில் சாலையில் நடந்த சென்றவர்களும் மயங்கி கீழே விழுந்தனர். அத்துடன், அந்த கிராம பகுதியிலிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தற்போது, அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, அம்மாநில முதலமைச்சர்  ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அத்துடன், விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.