சென்னை, கோவை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் எதிர்பார்த்த அளவை விட, சற்று வேகமாகப் பரவி வருகிறது கொரோனா வைரஸ். தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சென்னையில் தான், அதிக அளவிலான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் “சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக” முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, “சென்னை, கோவை, மதுரையில் வரும் 26 ஆம் தேதி காலை முதல், 29 ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும்“ முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

“சேலம், திருப்பூரில் 26 ஆம் தேதி காலை முதல், 28 ஆம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும்” முதலமைச்சர் கூறினார்.

அத்துடன், “தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் நோய்த்தடுப்பு பகுதிகளில் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவித்த அவர், கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மக்கள் ஒத்துழைப்பைத் தர வேண்டும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக, “ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.