சிறப்பாக பணியாற்றுவதில் நாட்டிலேயே தமிழக காவல்துறை முதலிடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக, இந்திய நீதி அறிக்கை 2019 ஆண்டுக்கான ஆய்வறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், தேசிய அளவில் காவல்துறை, சிறைத்துறை, தடயவியல் துறை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளது. மேலும் நீதித்துறை மற்றும் சட்ட உதவிகள் ஆகிய துறைகளின் அன்றாட செயல்பாடுகளைப் பொறுத்தே நீதி வழங்கும் அறிக்கையை, இந்திய நீதி அறிக்கை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிறப்பாக பணியாற்றுவதில் நாட்டிலேயே தமிழக காவல்துறை முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல், நீதி வழங்குவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மூன்றாமிடத்திலும், உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்த தகவலை, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த செய்தியைத் தமிழ்நாடு காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு தரப்பினரும் தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழக காவல்துறையில் உள்ள குறைகளையும் பொதுமக்கள் சிலர் சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.