வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காரணமாகத் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் தொடர்ந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசை நோக்கித் தாழ்வு மண்டலமாக நகரும் என்று கணிக்கப்பட்டதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து 2 நாட்களுக்குக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரித்திருந்தது.

இந்நிலையில், கன்னியாகுமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக, மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை, காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

இதனால், குமரிக் கடலில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. கனமழை எச்சரிக்கையால், கன்னியாகுமரி கடல் பகுதியில் வழக்கத்தை விட, கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால், அங்குள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்குப் படகு போக்குவரத்து நேற்று மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.