ஊரடங்கால் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல்லை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும், விமானம், ரயில், பேருந்து, கார் உள்ளிட்ட அனைத்துவிதமான வாகன போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, வேலைக்காக வெளி மாநிலம் சென்றவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவல நிலை கடந்த ஒரு வாரம் காலமாக இந்தியா முழுவதும் நீடிக்கிறது.

இந்நிலையில், நாமக்கலைச் சேர்ந்த லோகேஷ் சுப்ரமணி என்ற 23 வயது இளைஞர், மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அந்த இளைஞர் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், சொந்த ஊர் செல்ல அவர் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, லோகேஷ் சுப்ரமணி உட்பட 30 இளைஞர்கள் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்தனர். இதன் காரணமாக அவர்கள் அனைவரும், 200 முதல் 300 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடந்தே செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு நடந்து வந்திருந்த நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.