இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் எதிர்கொண்டு திண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கை அரசை கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ரத்மலானே பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதசா கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த அரசுக்கு நீண்ட காலம் உள்ளதாகவும், ஆனால் மக்களிடையே அரசுக்கு ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார். இந்த அராஜக அரசை தோற்கடித்து நாட்டை புதிதாக கட்டியெழுப்பும் குழுவிற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் சஜித் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.

மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் எதிர்கொண்டு திண்டாடி வருகின்றனர். எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல மணி நேர மின்வெட்டு உள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு நாளுக்கு நாள் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாக, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க மின்சாரத்துறை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்காரணமாக, 6 மணி முதல் 8 மணி நேரம் வரை அமல்படுத்தப்பட்டு வந்த மின்வெட்டு 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள், விவசாயம் சார்ந்த பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் பல இன்னல்களை அனுபவித்து வரும் இலங்கை மக்கள் 10 மணி நேர மின்வெட்டு என்ற அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.