நாளை முதல் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு, சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் இயல்பு வழக்கைப் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், நாளை முதல் சிறப்பு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்குத் துவங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதற்கட்டமாக டெல்லியிலிருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், செக்கந்தராபாத், மட்கோன, மும்பை, புவனேஸ்வர், அகமதாபாத், ஜம்மு தாவி, ராஞ்சி, பிலாஸ்பூர்,பாட்னா, ஹௌரா, அகர்தலா மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் மட்டுமே இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு மேற்கொள்ள முடியும் என்றும், முன்பதிவு செய்தவர்களைத் தவிர மற்ற நபர்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.

“ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும், அவை அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்” என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும், கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் என்றும், கொரோனா தொற்று உள்ளவர்கள் பயணிக்க முடியாது” என்றும் ரயில்வே அமைச்சகம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.