பணத்திற்காகச் சித்தியை இளைஞர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டி, நியாயவிலைக்கடை ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். அதில், முதல் மனைவி மகேஸ்வரி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், அவருக்கு கவிதா என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் இருந்தனர்.

இதனையடுத்து, மகேஸ்வரியின் தங்கை கோகிலாவை 2 வதாக அவர் திருமணம் செய்துகொண்டார். கோகிலாவிற்கு மகேந்திரன் என்ற சிறுவன் உள்ளான்.

இதனிடையே, கவிதா திருமணம் ஆகி கணவர் வீட்டிற்குச் சென்ற நிலையில், மணிகண்டன் எந்த வேலைக்கும் செல்லாமல், மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி சிறை சென்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாண்டி உயிரிழந்தது தொடர்பாக, அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை, பாண்டியின் மனைவி கோகிலா பெற்றுக்கொண்டார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த மணிகண்டன், தனது சித்தியிடம் தனது தந்தைக்கு வந்த பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அந்த பணத்தைப் பங்குபோடுவதில் பிரச்சனை எழுந்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, வீட்டிலிருந்த சிறுவன் மகேந்திரன், பள்ளியின் மூலம் 2 நாட்கள் சுற்றிலா சென்றுவிட்டு, வீடு திரும்பி உள்ளார். அப்போது, தாய் கோகிலா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதனைப்பார்த்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விரைந்த வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தந்தைக்கு வந்த பணத்தைக் கேட்டு, சித்தியை மணிகண்டன் கட்டையால் அடித்தே கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பான தடயங்களும் வீட்டில் கிடந்துள்ளன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.