டெல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீசார் - வழக்கறிஞர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அப்போது, அங்கு சில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், அங்கிருந்த வழக்கறிஞர்களுக்கும் இடையே, கடும் மோதம் ஏற்பட்டது. இதனால், ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். அப்போது, போலீசார் வாகனம் ஒன்று, தீ வைத்து எரிக்கப்பட்டது. மோதல் காரணமாக, நீதிமன்ற வளாகமே போர்களம் போல் காட்சி அளித்தது.

இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். ஆனாலும், மோதலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தினறினர். இதனையடுத்து, மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒரு வழக்கறிஞர் குண்டடிப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, மோதலில் ஈடுபட்ட அனைவரும் நாளாபுறமும் சிதறி ஓடினர். பின்னர், குண்டடிப்பட்ட வழக்கறிஞர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.