தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நிர்வாக ஆணையாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கொரோனா என்னும் பெருந்தொற்ற சென்னையில் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிர முயற்சிகள் எடுத்தாலும், அது போதவில்லை என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணனை, தமிழக அரசு நியமனம் செய்தது.

இதனைத்தொடர்ந்து, சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது உடனடியாக நிறைவேற்றப்பட முடியாமல், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது அனுமதியோடு செயல்பட்டு வந்தது.

இதனால், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்படலாம் என்ற தகவல் கடந்த சில மாதங்களாகவே உலா வந்தன.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் இறப்பு விகிதமும், சென்னை மாநகராட்சி வெளியிடும் கொரோனா இறப்பு விகிதமும் பெரிய அளவில் வித்தியசப்படுவதாகவும், இதனால் சென்னையில் கொரோனா உயிரிழப்பு தொடர்பான புள்ளி விவரங்களை தமிழக அரசு மறைக்கிறதா என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “தனியார் மருத்துவமனையில் நிகழும் கொரோனா இறப்பு விகிதம் இன்னும் எங்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என்றும், அந்த புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, அதையும் சேர்த்துக்கொள்வோம்” என்றும் இயல்பாகப் பதில் அளித்திருந்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அளித்த இந்த பதில், தொலைக்காட்சியில் பெரும் விவாத பொருளாக மாறியது. மேலும், இணையத்திலும் இது தொடர்பான கருத்து யுத்தம் நடைபெற்றது.

இதனையடுத்து, இது குறித்து ஆலோசித்த தமிழக அரசு, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக நிர்வாக ஆணையாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமனம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜெ.ராதாகிருஷ்ணன் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பதவியை மறு உத்தரவு வரும் வரை முழு கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, “நெருக்கடி நிலைகளைக் கையாளும் நிபுணராக ஜெ.ராதாகிருஷ்ணன் நன்கு அறியப்பட்டவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல பேரழிவுகளின் போது அவரை முன்னணி பணியில் ஈடுபடுத்தியதால், தமிழக அரசு மீண்டும் ஜெ.ராதாகிருஷ்ணனையே சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, “கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் அறிகுறி இருந்தால் மட்டுமே 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்” என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தற்போது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.