ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் 92 நகரங்களில் காற்று மாசு குறைந்து காணப்படுகிறது.

கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை வரை, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் சுமார் 130 கோடி மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்தியா முழுவதும் எந்த பகுதியிலும் 99 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் இயங்காமல் உள்ளன. பேருந்து, ரயில், விமானம், கார், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் இயங்கவில்லை.

குறிப்பாக, ஊரடங்கால் இந்தியாவில் புகையை வெளியேற்றும் எந்த ஒரு தொழிற்சாலைகளும் செயல்படவில்லை. இதனால், காற்றின் தரத்தைக் குறைக்கக் கூடிய நுண்துகள்கள், கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு ஆகியவற்றின் வெளிப்பாடு குறைந்து காற்றின் தரம் ஒரே அடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதனால், தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் சுமார் 92 நகரங்களில் நல்ல காற்று நிலவுவதாகவும், காற்று மாசு முற்றிலும் குறைந்து காணப்படுவதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, தலைநகர் டெல்லியில் காற்று மாசு 50 புள்ளிகளுக்குக் கீழே குறைந்துள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் காற்று மாசு குறைந்து நல்ல நிலையில் உள்ளது.

காற்று மாசுடன், ஒலி மாசும் மிகவும் குறைந்துள்ளது. சென்னையில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் 72 மைக்கேரா கிராம் அளவே உள்ளதாகவும், காற்று தற்போது சுத்தமான மற்றும் தரமான முறையில் இருப்பதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.