கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரொலியாகக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை செய்தது. சென்னையில், அதிகாலை வேளையில் சாரல் மழை பெய்தது. குறிப்பாக, அரியலூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு முதல், காலை வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால், அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பத்தொடங்கின.

மேலும், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து.

இதனையடுத்து, தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகத் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டியுள்ள தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சில பள்ளிகளுக்குக் குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்துள்ளனர்.