தனது திருமணத்துக்காகப் பஞ்சாபிலிருந்து, உத்தரப்பிரதேசத்துக்கு சுமார் 850 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் நண்பர்களுடன் பயணம் செய்த மாப்பிள்ளையை, போலீசார் பிடித்து, தனிமை முகாமில் அடைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சோனு குமார் சவுகான், பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி, சொந்த ஊரில் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். அது தொடர்பான நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதனையடுத்து, திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இதனிடையே, இந்தியாவில் ஊடுருவிய கொரோனா வைரஸ் பரவலால், நாடு முழுவதும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருமண தேதிக்குள் எப்படியாவது தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த சோனு குமார், தனது சக நண்பர்களுடன், சைக்கிளில் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி, தன்னுடன் வேலைபார்த்த சக நண்பர்களுடன், பஞ்சாபிலிருந்து, உத்தரப்பிரதேசத்துக்கு சுமார் 850 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்தார். இரவு - பகல் பார்க்காமல், சைக்கிள் ஓட்டி சுமார் 850 கிலோ மீட்டர் தூரம் சோனு குமார் தன் நண்பர்களுடன் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள் வந்துள்ளார்.

ஆனால், இன்னும் 150 கிலோ மீட்டர் தொலைவில் தன் சொந்த ஊர் உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்ட எல்லைக்கு வந்தபோது, அங்கு பணியிலிருந்த போலீசார், சோனு குமார் உட்பட அவருடைய நண்பர்கள் 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்கள் 4 பேரையும் கொரோனா தனிமை முகாமில் அடைத்தனர்.

கடந்த 7 நாட்களாக புதுமாப்பிள்ளை, போலீசாரிடம் எவ்வளவோ மன்றாடி கெஞ்சிக் கேட்டும், போலீசார் அவர்களை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

இதனால், திருமண கனவு கலைந்த அதிர்ச்சியில், புது மாப்பிள்ளை சோகத்தில் மூழ்கி உள்ளார். மாநிலம் விட்டு மாநிலம், சுமார் 850 கிலோ மீட்டர் பயணம் செய்தும், இன்னும் 150 கிலோ மீட்டர் தூரத்தில் தன் ஊருக்குச் செல்வதற்கு முன், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.