சென்னையில் மளிகை பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து அனைத்தும் முடங்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் திறந்திருக்க கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வரும் மளிகை பொருட்கள் அனைத்தும், வராமல் முழுமையாகத் தடைப்பட்டுள்ளன.

காலை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால், குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மளிகை பொருட்களின் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, கடந்த வாரம் 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உளுந்தம் பருப்பு, இன்று 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம்பருப்பு இன்று 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாசிப்பருப்பு இன்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கடலை பருப்பு இன்று 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும், கடந்த வாரம் 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தனியா, தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காய்ந்த மிளகாய் வத்தல் விலை 100 ரூபாய் அதிகரித்து, 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 170 ரூபாய்க்கு விற்பனையான சோம்பு தற்போது 250 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெந்தயம் 150 ரூபாய்க்கு, 160 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு 240 ரூபாய்க்கு தற்போது விற்கப்பட்டு வருகிறது.

வெளிமாநிலங்களிலிருந்து பொருட்கள் வராததால், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கடை வியாபாரிகள் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே, மளிகைப் பொருட்களை பதுக்கி வைப்பவர்களுக்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.