நடுக்கடலில் மீனவர்கள் மோதக்கொண்டதையடுத்து, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

புதுச்சேரி நல்லவாடு, வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையே சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாகக் கடந்த ஒரு மாதமாகப் பிரச்சனை எழுந்துள்ளது.இது தொடர்பாகக் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரு கிராம மீனவர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நல்லவாடு மீனவக் கிராமத்தில் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலையை, வீராம்பட்டினம் மீனவர்கள் கும்பலாக வந்து தீ வைத்து எரித்துவிட்டு, தப்பித்துச் சென்றனர்.

இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால், பதற்றத்தைத் தனிக்கும் பொருட்டு, இரு கிராம மீனவர்களையும் அழைத்து போலீசார் சமாதானம் பேசினார். ஆனால், இரு தரப்பினரும் இதில் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நடுக்கடலில் இன்று மீன் பிடித்துக்கொண்டிருந்த இரு கிராம மீனவர்களிடையே, மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இதில், இரு கிராம மீனவர்களும் கடுமையான ஆயுதங்களுடன் நடுக்கடலில் மோதிக்கொண்டனர். இந்த மோதலில், 3 மீனவர்களுக்குக் கத்திக்குத்து ஏற்பட்டு, படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே, மீனவர்கள் கலவரம் தொடர்பாக விரைந்து வந்த போலீசார், கடற்கரைக்கு வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், கலவரத்தில் ஈடுபட்ட மீனவர்கள் நாளா புறமும் சிதறி ஓடினர். இதனையடுத்து, கடற்கரையில் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடற்கரை பகுதியில் அதிகமான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.