இத்தாலி நாட்டில் மக்கள் பணத்தை வீதிகளில் வீசி எரிவதாகப் பரப்பப்பட்டு வந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ், சீனாவைக் காட்டிலும் அமெரிக்கா மற்றும் இத்தாலி நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழப்பவர்கள் பலரும், மிகப் பெரிய செல்வந்தர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், கோடிக் கணக்கில் பணம் இருந்தும், உயிரைக் காப்பற்ற முடியவில்லை என்றும், கொரோனா வைரசிடமிருந்து தப்ப முடியவில்லை என்றும், அளவுக்கு அதிகமாக பணம் இருந்தும், அவற்றை வைத்து, தற்போது இத்தாலி வீதிகளில் சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியவில்லை என்றும் கூறி, அந்நாட்டு மக்கள் கடும் விரக்தியடைந்து, தாங்கள் சேர்த்து வைத்த பணத்தை வீதிகளில் வீசி வருவதாகவும் செய்திகள் தொடர்ந்து பரவி வந்தன.

அப்படி இத்தாலி நாட்டின் வீதிகளில், மக்கள் பணத்தை வீசியதாகக் கூறப்படும் படம், தற்போது இணையத்தில் வைரலானது.

மேலும், இந்த பணம் எல்லாம் “உயிரைக் காப்பாற்ற முடியாத வெறும் காகிதம்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன், அந்நாட்டு மக்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் இணையத்தில் செய்தி பரப்பப்பட்டு வந்தது.

ஆனால், இந்த படம் பொய்யான தகவல் என்றும், குறிப்பிட்ட இந்த படம், வெனிசுலா நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கிக் கொள்ளையின்போது எடுக்கப்பட்டது என்றும் தற்போது கூறப்படுகிறது. இதனால், இத்தாலி மக்கள் பணத்தை வீதிகளில் வீசுகிறார்கள் என்ற வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.