நடிகர் சூர்யா மீது குற்றம்சாட்டிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால், மனசாட்சியை உலுக்கிய நிலையில், நடிகர் சூர்யா இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து, காணொலியின் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று ஒரு வரியையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த வரியை மேற்கொள் காட்டிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் சூர்யாவின் கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். இதனால், உலகம் முழுவதும் உள்ள நடிகர் சூர்யா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இணையத்தில் ஒரு கருத்து யுத்தமே நடத்தினார்கள்.

இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, “நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார்” என்று குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, “நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை” என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில், “4 மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர். “நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதைப் போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றும், நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அத்துடன், “சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து விட்டு நல்ல வேலை வாய்ப்பை பெற்றுள்ள நிலையில், பெருந்தன்மையாகக் கைவிட வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை” என்றும், 6 நீதிபதிகள் ஒன்று சேர்ந்து கூறியிருந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, வழக்குரைஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்து உள்ளார்.

அதில், “நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தேர்வு குறித்த அறிக்கையை ஊடகங்கள், சமூக ஊடக வலைத்தளங்கள் செய்தியாக மாற்றியன. அது குறித்து முழுமையாக அறியாமல் எந்த புரிதலும் இல்லாமல், பதிவுகளை முறையாக ஆராயாமல், நீதித்துறை நிர்வாக மனப்பான்மை சிறிதும் இன்றி ஒரு தன்னிச்சையான முடிவில், மலிவான விளம்பரத்திற்காக நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதில், “நீட் நுழைவுத் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட குறிப்பை டி.வி மற்றும் யூடியூபில் பார்த்ததாகக் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அக்கறையை வெளிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த வகையில் தனது உரிமைக்காக நடிகர் சூர்யா குரல் கொடுத்து உள்ளார். அதில், நீதிபதிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணை நடத்தி நீதியை வழங்கும் சூழலில், ​மாணவர்கள் மட்டும் எப்படி கோவிட் 19 பரவல் குறித்து அச்சமின்றி நீட் தேர்வு எழுத முடியும்? என கேள்வி எழுப்பி இருந்ததாகவும்” சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிமன்ற அவமதிப்புக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும், மனித நேய அடிப்படையிலும், மாநில உரிமை அரசியல் பார்வையிலும் நீதித்துறை அதன் அரசியலமைப்பு ரீதியாகப் பலரால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளைத் தான் நடிகர் சூர்யாவும் வெளிப்படுத்தி உள்ளார். அதுவே அவரது நோக்கமாகும்” என்றும், மேற்கோள்காட்டி உள்ளார்.

“ஆனால், இதை உணராமல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு என கூறுகிறார். அத்துடன், உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் எழுதிய கடிதம் ஊடகங்களில் எவ்வாறு வெளியானது? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தைச் சட்ட விதிமுறைகளை மீறி பொதுவில் வெளியிட்டதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? நீதித்துறை கொள்கைகளுக்கு எதிராகச் சட்டவிரோதமான, தன்னிச்சையான, நியாயமற்ற, அதிகார துஷ்பிரயோகமாகவே இதனைக் கருத வேண்டும். அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த கருத்து, மீண்டும் வைரலாகி வருகிறது.