பிரதமர் பிறந்தநாளில், பக்கோடா விற்ற பட்டதாரிகள் - வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி எழுப்பும் ராகுல்!

பிரதமர் பிறந்தநாளில், பக்கோடா விற்ற பட்டதாரிகள் - வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி எழுப்பும் ராகுல்! - Daily news

இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் நிலவி வரும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை காரணமாக நமது இளைஞர்கள் இன்றைய தினத்தை தேசிய வேலைவாய்ப்பின்மை நாள் என்று அழைக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு வழங்காமல் மறுக்கப்போகிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் வெளியான அறிக்கையையும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஆனால் இளைஞர்கள் மோடியின் பிறந்தநாளைத் தேசிய வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரித்து வருகின்றனரோ என்ற விமர்சனமும் பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம், 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்ற தரவுகளின் முடிவுகள் தான். 

வேலைவாய்ப்பின்மை விவகாரத்தில், பிற காலத்தை விடவும் தற்போது கொரோனா காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் வேலையிழந்து கிடைக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்கள் கூட ஊரடங்கால் வேலையிழந்து தற்போது டீ விற்பது மற்றும் கூடை பின்னல் தொழில் செய்து வருகின்றனர் என்பதை நம்மால் செய்திகளில் பார்க்கமுடிகிறது.

இந்நிலையில் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு உலக தலைவர்கள், தேசிய தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், இந்நாளைத் தேசிய வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரித்து, இளைஞர்கள் பிரதமருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ``ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? தனியார்மயமாக்கல் ஏன்?" என #NationalUnemploymentDay என்ற ஹேஷ்டேக் மூலம் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் டெல்லி, விண்ட்சர் பிளேஸில் உள்ள என்.எஸ்.யு.ஐ அலுவலகத்திற்கு வெளியே, காங்கிரஸ் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள், டீ ஸ்டால் அமைத்து அதில் பக்கோடா மற்றும் டீ விற்று பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த நூதன போராட்டத்தின் போது அவர்கள், எம்பிபிஎஸ் பக்கோடா, எல்எல்பி பக்கோடா என தங்களது பட்டங்களைக் குறிப்பிட்டு பக்கோடா விற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து பக்கோடா விற்ற சில மாணவர்கள் கூறுகையில், “இந்த போராட்டத்தின் மூலம் யாரையும் கேலி செய்ய நாங்கள் விரும்பவில்லை. உண்மையில், பிரதமர் ஒரு முறை கூறியதை நாங்கள் இன்று செய்தோம்” என்று தெரிவித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றில் பக்கோடா விற்பது கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாகும். இதன்மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறியிருந்தார். இது பட்டதாரி மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அவரது பிறந்தநாளில் பக்கோடா விற்று வேலைவாய்ப்பின்மையைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Comment