தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீக்கடைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, 3 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், மத்திய - மாநில அரசுகள், பல்வேறு தளர்வுகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றன.

அதன்படி, சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல், மாலை 7 மணி வரை விற்பனை செய்யலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்பாக, சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள டீக்கடைகளை திறக்கவும், தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி என்றும், டீக்கடைகளில் நின்றோ உட்கார்ந்தோ டீ அருந்தக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

மேலும், தினமும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறினால் உடனடியாக டீக்கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன், காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்றும், தமிழகத்தின் பிற பகுதிகளில் காலை 10 மணி முதல், மாலை 7 மணி வரை செயல்படலாம் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்றும், தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த புதிய தளர்வுகள் அனைத்தும், வரும் 11 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.