கிளப், ஓட்டல்கள், பார்கள், உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

இதனிடையே, கடந்த 4 ஆம் தேதி முதல் 3 வது முறையாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட நிலையில், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தமிழகத்திலும், கடந்த 7 ஆம் தேதி முதல் 2 நாட்கள் மதுகடைகள் செயல்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மது கடையையும் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆன் லைன் மற்றும் மறைமுக மதுபான விற்பனையை நடத்த பரிசீலிக்குமாறு மாநில அரசுகளுக்கு, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனிடையே, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானங்களை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கர்நாடகாவில் திறக்கப்பட்ட மதுக் கடையில் அதிக அளவிலான கூட்டம் அலைமோதுவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ஆம் தேதி வரை, மதுபானங்களை விற்பனை செய்யக் கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், ஒரு வாரத்திற்கு பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியானது, தினமும் காலை 9 மணி முதல், இரவு 7 மணி வரை மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அம்மாநில கலால் துறை சார்பாக அறிக்கை விடப்பட்டுள்ளது.