ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இதன் காரணமாக, அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. எனினும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், வரும் 17 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, ஜூன் 30 ஆம் தேதி வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என்றும், ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. அதன்படி, அனைத்து சிறப்பு ரயில்கள், ஷிராமிக் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும், ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.