தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்று சர்ச்சை வெடித்துள்ளது.
'
இதனால் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் விஸ்வரூவம் எடுத்து வருகிறது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, வழிகாட்டும் குழு அமைப்பது, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டன.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு இணையும் போது கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனை உடனடியாக அமைக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருமான முதலமைச்சரும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பல மணி நேரம் நடைப்பெற்ற இக்கூட்டத்தை தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைபாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் இ.பி.எஸ் ஆகியோர் இணைத்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில்,” அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில், கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே யாரிடமும் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், சென்னை அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த மே 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 24-05-2020 அன்று மாலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

மாஸ்டர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் வந்திருந்தார். இன்று காலை ஒரு மருத்துவக் குழு அவரின் சோதனை முடிவுகளை ஆராய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மே 25-ம் தேதி மாலை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், 3 மாதங்களுக்குப்பின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதயவியல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்து இன்று பிற்பலோ, மாலையோ வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளதாகவும், அப்போது, முதல்வருடன் தமிழக அமைச்சர்களும் சென்று ஓபிஎஸ் உடல்நலம் குறித்து விசாரிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.