கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் இல்லை என்றும், தற்போதைய ஒரே தடுப்பூசி சமூக விலகல் மட்டுமே இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் பிடியில் உலகமே சிக்கித் தவித்து வருகிறது. ஆனால், இதுவரை கொரோனாவாவுக்கு மருந்து எதுவும் கடுப்படிக்காத நிலையில், கொரோனா பதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், “நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளதாக” குறிப்பிட்டார்.

மேலும்,“ இதுவரை 2 ஆயிரத்து 546 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 553 பேர் இந்த தொற்றா​ல் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், 36 பேர் உயிரிழந்தனர் என்றும் லாவ் அகர்வால் கூறினார்.

“கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைபவர்கள் எண்ணிக்கை 14 புள்ளி 75 சதவீதமாக இருப்பதாகவும், கடந்த 2 வாரத்தில் நோய் தொற்று இல்லாத மாவட்டங்கள் எண்ணிக்கை தற்போது இந்திய அளவில் 59 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, “யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட லால் அகர்வால், ஊரடங்கை முறையாகப் பின்பற்றுவது மக்களின் மீட்பு விகிதத்தை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

“புதுச்சேரியில் மாகே, கர்நாடகாவின் குடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய மாவட்டங்களில், கடந்த 28 நாட்களில் புதிதாக ஒரு கொரோனா தோற்று கூட கண்டறியப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் தற்போது இல்லை என்றும், தற்போதைய ஒரே தடுப்பூசி சமூக விலகல் மட்டுமே இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.