விர்ஜீனியாவில் வெர்ஜின் பெண்களுடன் நித்தியானந்தா தியானத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமத்தில், தனது 4 மகள்களை அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 மகள்களை மீட்டனர். ஆனால், மற்ற 2 மகள்களும் அங்கு இல்லை. அவர்களை மீட்டுத் தரகோரி, ஜனார்த்தன சர்மா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, ஜனார்த்தன சர்மாவின் மகள்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தகோரி அகமதாபாத் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாகக் கடத்தல் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், நித்தியானத்தா, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது.குறிப்பாக, அவர் ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்று பெயர் வைத்து, தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கியதாகத் தகவல் வெளியானது. இதனை முற்றிலுமாக ஈக்வடார் அரசு மறுத்தது.

இந்நிலையில், ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது,ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சாலை மார்க்கமாக நேபாளம் சென்றதாகவும், அங்கிருந்து கரீபியன் தீவுக்குச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “எங்கள் தந்தை ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியாவில் இருக்கிறோம். இங்குள்ள, சரியான முகவரி தெரியவில்லை” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இது தொடர்பான அறிக்கைகளை வரும் 19 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனிடையே, நித்தியானத்தா அங்கு இருக்கிறார், இங்கு இருக்கிறார்.. எங்கோ இருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், அவர் இப்போது விர்ஜீனியாவில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.