மருத்துவர் சிறைவைக்கப்பட்ட விவகாரத்தில் நித்தியானந்தாவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த அங்கம்மாள் மகன், முருகானந்தம் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், திடீரென்று மனம் மாறி, ஆன்மிக வழியைத் தேர்ந்தெடுத்த அவர், பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தங்கியிருந்தார்.

இதனால், தயார் அங்கம்மாள் அடிக்கடி பெங்களூர் சென்று, தன் மகனை சந்தித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மகனைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும், நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக தன் மகன் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தன் மகனை மீட்டுத்தரகோரி, அங்கம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த 2 பேர் அடங்கிய நீதிபதி அமர்வு, இது தொடர்பாக நித்தியானந்தா 4 வாரத்திற்குள் பதில் அளிக்க கோரி உத்தரவிட்டனர்.

அத்துடன், கடந்த மாதம் ஈரோடு காவல் நிலையத்தில் அங்கம்மாள் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்கவும் ஈரோடு மாவட்ட போலீசாருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நித்தியானந்தாவுக்கு எதிராகக் குஜராத் மற்றும் பெங்களூர் நீதிமன்றங்கள் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், தற்போது, சென்னை உயர்நீதிமன்றமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், நித்தியானந்தாவுக்கு நெருக்கடி மேலும் முற்றியுள்ளது.