13 வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பரபரப்பாகக் கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட சில வீரர்களைத் தவிர மற்ற வீரர்களை அணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இதனால், அடுத்த சீசன் தொடங்கும் முன்பே, புதிய வீரர்கள் உட்பட கடந்த ஆண்டு அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் வரை அனைவரையும் மற்ற அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுப்பது வழக்கம்.

 IPL 2020 auction going at Kolkata BCCI

அதன்படி, கடந்த சீசனில் விளையாடிய பல வீரர்களை அந்தந்த அணி விடுவித்தது. ஆனால், இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணியில் பெரும்பாலான வீரர்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டனர். இதனால், இந்த இரு அணியிலும் கடந்த ஆண்டு இருந்த வீரர்களே, பெரும்பாலும் இந்த ஆண்டும் தொடர்கிறார்கள்.

இருந்தாலும், 8 அணிகளுக்கு 73 வீரர்கள் தேவை என்ற நிலையில், மொத்தம் 332 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இதில், 29 வெளிநாட்டு வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கி தற்போது வரை நடைபெற்றது.

 IPL 2020 auction going at Kolkata BCCI

அதன்படி முதல் வீரராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் ஏலம் விடப்பட்டார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி, 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.  அவரைத் தொடர்ந்து, இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 1.50 கோடி ரூபாய்க்கு, டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில், இவர் டெல்லி அணியில் விளையாடிய நிலையில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அவரின் அடிப்படை விலையிலேயே, டெல்லி அணி அவரை மீண்டும் ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் மோர்கனை 5.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. இவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இவரை எடுக்கக் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் கடும் போட்டி போட்டன. இறுதியில், கொல்கத்தா அணியே, இவரை ஏலத்தில் எடுத்தது.

 IPL 2020 auction going at Kolkata BCCI

ராபின் உத்தப்பாவை 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி.

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸை 15.50 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது. தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை, 10 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

அதேபோல், கடந்த முறை நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிரடியாக விளையாடி, ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்தின் இளம் புயல் ஆல்ரவுண்டர் சாம் கரனை, 5.5 கோடி ரூபாய்க்கு சென்னை அணி விடாப்பிடியாக இருந்து ஏலத்தில் எடுத்தது. சாம் கரனை ஏலத்தில் எடுக்க டெல்லி - சென்னை அணி இடையே கடும் போட்டி நிலவியது. இதில், சென்னை அணியே சாம் கரனை தன் அணிக்குச் சொந்தமாக்கியது.

 IPL 2020 auction going at Kolkata BCCI

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டை 3 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. இந்திய வீரர் விராட் சிங்கை 1.90 கோடி ரூபாய்க்கும், 19 வயதுக்குப்பட்டோர் அணி கேப்டன் பிரியம் கார்க்கை, 1.90 கோடி ரூபாய்க்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. 

அதேபோல், பியூஷ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

 IPL 2020 auction going at Kolkata BCCI

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் நாதன் குல்ட்டர் நைலை எடுக்க, சென்னை - மும்பை அணிகள் இடையே கடும் போட்டி நிலவின. அவரை, இரு அணிகளுமே விட்டுக்கொடுப்பதாயில்லை. விடாமல் ஏலத்தில் மாறி மாறி கேட்டனர். 2 சாம்பியன் அணிகளும் குல்ட்டர் நைலுக்காக அடித்துக் கொண்டிருக்க, மற்ற அணிகள் இதனை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தன. இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி, 8 கோடி ரூபாய்க்கு நாதன் குல்ட்டர் நைலை ஏலத்தில் எடுத்தது. 

மேற்கு இந்திய தீவுகள் அணி வேகப்பந்து வீச்சாளர் காட்ரல்லை பஞ்சாப் அணி 8.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

அரோன் ஃபின்ச் 4.40 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணியும், கிறிஸ் வோக்ஸ் 1.5 கோடி ரூபாய்க்கு  டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், அலெக்ஸ் கேரி 2.4 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன.

 IPL 2020 auction going at Kolkata BCCI

மோகித் சர்மாவை 2.4 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியும், ஷெல்டன் காட்ரெல்லை 8.5 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 
ராகுல் திரிபாதியை, 60 லட்சம் ரூபாய்க்கு 
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், தீபக் ஹூடா 50 லட்சம் ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்தன.

வருண் சக்கரவர்த்தி 4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 

யாஷஸ்வி ஜெயஸ்வால் 2.4 கோடி ரூபாய்க்கும்,  அனுஜ் ராவத் 80 லட்சம் ரூபாய்க்கும், ஆகாஷ் சிங் 20 லட்சத்துக்கு ரூபாய்க்கும், கார்த்திக் தியாகி  1.3 கோடி ரூபாய்க்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர்.

ரவி பிஷோனி 2 கோடிக்கு ரூபாய்க்கும், இஷான் பொரெல் 20 லட்சம் ரூபாய்க்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர். 

ஷிம்ரான் ஹெட்மயர் 7.75 கோடி ரூபாய்க்கு, டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்திய வீரர்கள் புஜாரா, ஹனும விஹாரி, மனோஜ் திவாரி ஆகியோர் முதல் சுற்றில் ஏலம் போகாத வீரர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளனர். 

 IPL 2020 auction going at Kolkata BCCI

இவர்களைப் போலவே டி கிராண்ட் ஹோம், யூசுஃவ் பதான், ஸ்டுவட் பின்னி, நமன் ஓஜா, ஷாய் ஹோப், 
டேல் ஸ்டெயின், குஷல் பெரேரா, ஆண்ட்ரூ டை, டிம் சவுத்தி, இஷ் ஷோதி, ஹேடன் வால்ஷ், ஆடம் ஷாம்பா ஆகிய வீரர்களும் முதல் சுற்றில் ஏலம் போகாத வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளனர்.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.