வங்கிகளில் பணம் எடுக்க இன்று முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக, தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 40 நாட்கள் பொது முடக்கம் அமலிலிருந்த நிலையில், இன்று முதல் மேலும் 2 வாரங்களுக்கு பொதுமுடக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 17 ஆம் தேதி வரை, இந்த பொதுமுடக்கள் செயலில் இருக்கம் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதனிடையே, கடந்த 40 நாட்களும் பொது முடக்கக் காலத்தில் வங்கிகளில் பணம் எடுக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும், அவர்களில் பலர் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இதனால், வங்கி ஊழியர்கள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாமல் கடும் அவதியுற்றதாகவும் கூறப்பட்டது.

குறிப்பாக, மாதத்தின் தொடக்கத்தில் தான், இந்த கூட்டம் வங்கிகளில் அலைமோதுவதாகவும், 10,12 தேதிகளுக்கு பிறகு இந்த கூட்டம் அப்படியே குறைந்துவிடுவதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்திய இந்திய வங்கிகள் சங்கம், புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இன்று முதல் புதிய விதிமுறைகள், வங்கிகளில் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி, வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ஆம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 2 மற்றும் 3 உள்ளவர்கள் மே 5 ஆம் தேதி, தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.

அதேபோல், 4 மற்றும் 5 கடைசி இலக்கங்களை கொண்டவர்கள் மே 6 ஆம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 இலக்கங்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள்

மே 8 ஆம் தேதியும், 8 மற்றும் 9 இலக்கங்களை கடைசியாகக் கொண்டவர்கள், மே 11 ஆம் தேதியும் பணத்தை எடுக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும், மே 11 ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றும், இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்பிறகு, வழக்கம் போல் யார் வேண்டுமானாலும் எந்த தேதியிலும் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.