அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், சமையல் குறிப்பு புத்தகங்களைக்கூட இங்கே விற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 43 வது புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இங்கு, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்குக் கடை போட வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

அதனால், கருத்து சுதந்தரம் நசுக்கப்படுவதாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு படைப்பாளர்கள், தமிழக அரசை விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன், “கீழடி ஈரடி” என்னும் தலைப்பில் பேசுவதற்காக, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்தார்.

அப்போது, விழாவில் பேசிய சு.வெங்கடேசன், எடுத்ததுமே, “நான் கீழடி குறித்து பேசப்போவதில்லை” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், இங்கே விற்கப்படும் சமையல் குறிப்பு புத்தகத்தில் வெங்காயம் பற்றி இருக்கிறது. அது, மத்திய அரசுக்கு எதிரானது. உப்பு குறி்து இருக்கிறது. அது மாநில அரசுக்கு எதிரானதாக இருக்கும்.

அவ்வளவு ஏன், தலைவர்கள் எழுதிய புத்தகங்களே அரசுக்கு எதிரானவை தான். அதன்படி காந்தி, அம்பேத்கார், அண்ணாவின் புத்தகங்களைக்கூட இங்கே விற்க முடியாது. அத்துடன், சர்ச்சைக்குரிய கீழடிய கண்காட்சியிலிருந்து நீக்கி விடுவீர்களா?” என்றும் ஆவேசமாக விமர்சித்தார்.

மேலும், “பபாசியின் நடவடிக்கையானது, கருத்துரிமைக்கு எதிரானது. எதற்காகவும் கருத்துச் சுதந்திரத்தைக் காவு கொடுக்க முடியாது” என்றும் விளாசித் தள்ளினார்.

இதனிடையே, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் மேடையிலேயே, அவர்களை சு.வெங்கடேசன், கடுமையாக விமர்சனம் செய்தது, அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.