தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வங்கக் கடலின் தென் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆம்பன் புயலாக மாறியது. அந்த புயல் மேலும் வலுவடைந்து, சூப்பர் புயலாக மாறி வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தில் கரையைக் கடந்தது.

ஆம்பன் புயல் உருவானபோது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டது. இதனால், தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த வரும் 3 தினங்களுக்கு கடும் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக, வட தமிழகத்தில் பகல் 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே யாரும் வரவேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அத்துடன், வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், பலத்த காற்று வீசும் என்பதால் தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

அத்துடன், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.