தமிழகத்தில் பொது முடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாகவே தளர்த்த வேண்டும் என்று, முதலமைச்சர் பழனிசாமியிடம் மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் காலை முதல் ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டம் சற்று முன்பு நிறைவடைந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மருத்துவ நிபுணர் குழுவினர் சார்பாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரதீப் கவுர், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான், அதிக பாதிப்புகளைக் கண்டறிய முடிகிறது என்றும், இந்த பரிசோதனை பணி மேலும் தொடரும் என்றும், அப்போதுதான், கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” என்றும், டாக்டர் பிரதீப் கவுர் கூறினார்.

“பணியிடங்களில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட டாக்டர் பிரதீப் கவுர், கொரோனா பரவலைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்று வலியுறுத்தினார்.

அதேபோல், “ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாகக் கைவிட வாய்ப்பு இல்லை என்றும், படிப்படியாகத்தான் குறைக்க வேண்டி உள்ளது என்றும், இதனால் ஊரடங்கு தொடரும்” என்றும், பிரதீப் கவுர் கூறினார்.

குறிப்பாக, தமிழகத்தில் பொது முடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல், படிப்படியாகவே தளர்த்த வேண்டும் என்று, முதலமைச்சர் பழனிசாமியிடம் மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாகவும்” டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்தார்.