ஓ.பி.எஸ்.யை ஜெயலலிதா சமாதியில் அமரச் சொன்னதே நான்தான் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, 2 ஆக பிரிந்த அதிமுகவைச் சேர்த்து வைத்ததில் தனக்குப் பங்கு உண்டு என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஓ.பி.எஸ்.யை ஜெயலலிதா சமாதியில் அமரச் சொன்னதே நான்தான் என்றும், என் அறிவுரைப்படியே, சில விசயங்களை அவர் செய்தார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ஓ.பி.எஸ். தியானத்திற்குப் பின், பிரிந்து கிடந்த அதிமுகவை தாம்ஒருங்கிணைத்ததாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியைக் கவிழ்த்தால், திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்றும் தான் பயந்ததாகவும் அவர் கூறினார்.

ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும், அரசியலுக்கு ரஜினி வரவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். குறிப்பாக, ஆட்சிக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர் ரஜினி இல்லை என்றும், தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பெரிய சக்தி திமுக தான் என்றும் குருமூர்த்தி கூறினார்.