கர்நாடகாவில் போதைக்கு அடிமையான அண்ணன், தனது தங்கையைக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“ராம்“ திரைப்படத்தில் வரும் கொலை சம்பவம் போன்றே, கர்நாடகாவில் தற்போது நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த பியோனா என்ற 16 வயது சிறுமி, அக்டோபர் 8 ஆம் தேதி, தனது வீட்டிலிருந்து காணாமல் போனார்.

இதனையடுத்து வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், வீட்டிலிருந்த மகன் சாம்சனிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர், தங்கை பியோனா மங்களூருக்குச் சென்றிருப்பதாகப் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, பியோனோவின் தொலைப்பேசியைத் தொடர்புகொண்டபோது, நீண்ட நேரமாக அவரது போன் சுவிட் ஆப் என்று வந்துள்ளது.

இதனால், சந்தேகமடைந்த சாம்சனின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினார்.

விசாரணையில், சிறுமியின் சகோதரர் சாம்சன், போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது. போதை பழக்கத்தால், அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் தெரியவந்தது. இதனால், சாம்சன் பயன்படுத்தி வந்த செல்போனை, அவரது தந்தை பிரான்சிஸ், பிடிக்கி தனது மகள் பியோனாவிடம் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றதும், பியோனோவிடம் செல்போனை கேட்டு அவர் கெஞ்சியுள்ளார். அவர் போனை கொடுக்க மறுக்கவே, அவரை அங்கிருந்த சுத்தியலால் கடுமையாகத் தாக்கி, கொலை செய்துள்ளார்.

மேலும், அவரது உடலை வீட்டின் பின்புறம் எறிந்துள்ளார். அங்கு, பியோனாவின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. குறிப்பாக, “தங்கை பியோனா மீது தனது பெற்றோர்கள் அதிக பாசம் வைத்திருந்ததாகவும், ஆனால் தன்னை வெறுத்ததாகவும், இதுவே தன்னை கொலை செய்யத் தூண்டியதாகவும்” அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சாம்சனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, போதைக்கு அடிமையான அண்ணன், தனது தங்கையைக் கொன்ற சம்பவம், கர்நாடகாவில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.