சினிமா பாணியில் இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 3 போலீசார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்த சரல்விளை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஜெர்லின், ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் 2 கார்களை புதிதாக வாங்கியதாகத் தெரிகிறது.

ஜெர்லினிடம் பணப்புழக்கம் திடீரென அதிகமாகக் காணப்பட்டதால், அவருக்குப் புதையல் கிடைத்திருக்கலாம் என்று பேசப்பட்டது. இதனையடுத்து, ஜெர்லினை போலீசார் அழைத்து விசாரித்த நிலையில், திடீரென்று அவர் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, பணம் கேட்டு மிரட்டப்பட்டார்.

பின்னர், அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் வெறும் பேப்பரில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டு, அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு அவரை அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட ஜெர்லின், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெரின்ராபி, கிருஷ்ணகுமார், சுரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலில் மொத்தம் 7 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக, இந்த கடத்தல் வழக்கில் கருங்கல் காவல் நிலைய ஆய்வாளர் பொன்தேவி, தலைமைக் காவலர் ஜெரோன்ஜோன்ஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபன் ஜெபதிலக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, 3 போலீசாரும் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பான தொலைப்பேசி உரையாடல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் என பலதரப்பட்ட ஆதாரங்கள் சிக்கின. இதனால், 3 போலீசாரும் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட 3 போலீசாரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சினிமா படப் பாணியில், போலீசாரே இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.