சிறுவனை அவசரமாக ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் பாதி வழியில் கியர் ராடு உடைந்து நின்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன், காய்ச்சல் காரணமாக, அங்குள்ள  ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 

ambulance

இந்நிலையில், சிறுவனுக்குப் பெயர் தெரியாத புதிய வகையான காய்ச்சல் தீவிரமடைந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, உயர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர்.
 
அப்போது, ஈத்தங்காடு அருகே 108 ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸின் கியர் ராடு உடைந்துள்ளது. இதனால், ஆம்புலன்ஸ் பாதி வழியிலேயே பழுதாகி நின்றுள்ளது. பின்னர், நாகர்கோவிலிலிருந்து வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வந்ததும் நடுரோட்டிலேயே, அந்த சிறுவனை வேறு ஆம்புலன்ஸுக்கு மாற்றி மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு சென்றனர்.

ambulance

மாற்று வாகனம் வருவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனதால், வாகனத்திலிருந்த சிறுவன் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, நடுவழியில் 108 ஆம்புலன்ஸ் பழுதானது, அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.