ஜெயங்கொண்டம் அருகே 11 ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உள்ள இலையூர் கோரியம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பாலுசாமி என்பவரின் மகன் 25 வயதான பாபா என்ற பிரபாகரன், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 26 ஆம் தேதி, யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்று உள்ளார்.

இதனையடுத்து, ஜெயங்கொண்டம் அருகில் உள்ள வடவீக்கம் கிராமத்திற்குக் கடத்திச் சென்று, சிறுமியை திருமணம் செய்துகொண்டு அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியை காணவில்லை என்று, சிறுமியின் பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்த நிலையில், சிறுமியின் தோழிகளிடமும் விசாரித்துள்ளனர். எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அங்குள்ள ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவ செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

அப்போது, ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் பகுதியில் பெண் காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து, வடவீக்கம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வானத்தில் வந்த பிரபாகரன், தான் கடத்திச் சென்ற 17 வயது சிறுமியுடன் சென்று உள்ளார்.

இதனைக் கவனித்த போலீசார், பிரபாகரனை மடக்கிப் பிடித்து விசாரித்து உள்ளனர். இதில், இருசக்கர வாகனத்தைச் ஓட்டிச் சென்றது பிரபாகரன் என்பதும், பின்புறம் அமர்ந்து இருந்தது கடந்த வாரம் கடத்திச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி என்பதும் தெரிய வந்தது.

மேலும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், வடவீக்கம் கிராமத்தில் ஒரு வீட்டில் தற்போது தங்கி குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காகப் பிரபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பிரபாகரன் காதல் என்ற பெயரில், இந்த அட்டகாசங்கள் செய்தது தெரிய வந்தது. அத்துடன், சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர். அப்போது, “நான் எனது பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன்” என்று கூறி உள்ளார். இதனால், சிறுமியின் விருப்பப்படி அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

எனினும், சிறுமியை அழைத்துச் சென்ற அவரது பெற்றோர், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் பிறகு, சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, காதல் என்ற பெயரில், இளைஞர்கள் பலர் இது போன்று அத்துமீறும் சம்பங்கள் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.