பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் 21 நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளதாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் பலாத்காரம் சாம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. அதில், பாதிப்பேர் தண்டனையிலிருந்து தப்பித்து வெளியே தான் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர்.

சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பற்றி எரிந்த நிலையில், என்கவுன்டர் மூலம் அந்த குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பலாத்கார வழக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 சம்பங்களும் கடந்த வாரத்தில் நாடுமுழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, ஐதராபாத் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கு ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால், அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் விதமாக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இதில், பல்வேறு அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால், குற்றவாளிகளுக்கு 21 நாள்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில், ஆந்திராவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதற்காக, ஆந்திர சட்டமன்றத்தில் நாளை மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

இந்த சட்டத்தின்படி, ஒரே வாரத்தில் வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றும், அடுத்த 2 வாரங்களுக்குள் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்காக, மாவட்டம் வாரியாகத் தனி நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நிர்பயா பெயரில் சட்டம் இயற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால், நிர்பயா கொல்லப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், அந்த குற்றவாளிகள் இன்றுவரை தூக்கிலிடவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு விரைவாகத் தண்டனை வழங்குவதுதான் எதிர்கால சமூகத்துக்கு நல்லது என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.