வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸை கலாய்த்தது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 50 பந்துகளில், 94 ரன்கள் விளாசி அசத்தினார்.

குறிப்பாக, வெறித்தனமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்துகளை எல்லா திசைகளிலும் அடித்து நொறுக்கினார். அப்போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசிய
விராட் கோலி, கலாய்க்கும் விதமாக வில்லியம்ஸ் கொண்டாடும் “நோட்புக்” ஸ்டைலில், ஆரவாரம் செய்தார்.

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸை வீசிய பந்தில் விராட் கோலி அவுட் ஆனார். அப்போது, வில்லியம்ஸ் “நோட்புக்” ஸ்டைலில், விராட் கோலி கலாய்த்தார். இதற்குப் பதில் சொல்லும் விதமாக, வில்லியம்ஸின் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு, தற்போது பதிலடி கொடுத்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விராட் கோலி, “இதற்கு முன்பு நாங்கள் விளையாடியபோது, அவர் பந்தில் நான் அவுட்டாக நேர்ந்தது. அப்போது, “நோட்புக்” ஸ்டைலில் அவர் ஆரவாரம் செய்தார். அதற்குப் பதிலடி தர நானும் நினைத்தேன். அதன்படியே, அப்படி ஆரவாரம் செய்தேன். போட்டி முடிந்து இருவரும் கைக் குலுக்கினோம். இது தான், எதிர் அணிக்கு நாம் தரும் மதிப்பு. எதிர் அணியை எப்போதும் மதிக்க வேண்டும்” என்றும் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, விராட் கோலியின் கலாய் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.